குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!
நேபாளத்தில் தலைவிரித்தாடும் ஊழல், பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பௌடேலும் தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.
ஏற்கனவே, போராட்டக்காரர்களின் வலியுறுத்தல் காரணமாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், அதிபரும் ராஜிநாமா செய்துள்ளார்.
நேபாளத்தில், ஊழல் மற்றும் குடும்ப உறவுகளுக்கு பதவிகளை அளித்து, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததாகக் குற்றம்சாட்டி, இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, நாட்டில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்ததால்தான் போராட்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், போராட்டத்தைத் தடுக்கவே, அந்நாட்டு அரசு சமூக ஊடகங்களை தடை செய்திருக்கலாம் என்று தற்போது கூறப்படுகிறது.
திங்கள்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் மக்களை அடக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறியது.
காவல்துறையும் ராணுவமும் பல இடங்களில் குவிக்கப்பட்டிருந்தாலும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் பிரதமர் இல்லத்துக்கும் தீ வைத்தனர்.
முன்னதாக, நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவே இளைஞா்கள் போராடியதாகக் கூறப்பட்டது.
ஆனால் அந்த போராட்டம், நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரானதாக மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவி விலகினார்.
ஏற்கனவே நேபாள பிரதமர், உள்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து வந்த நிலையில், தற்போது நேபாள அதிபரும் தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.
நேபாள பிரதமராக கே.பி.சா்மா ஓலி பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டமானது சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரானது மட்டுமன்றி ஊழலுக்கு எதிரானதாக மாறி செவ்வாயன்றும் தொடர்ந்தது.