டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
பசும்பொன் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் உலக நன்மை வேண்டி பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் மகா யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நாளான நாளை பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் மரியாதை செய்ய உள்ளனர்.

தலைவர்களின் வருகை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கென பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த பெண் காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அனைத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கலைவாணி (41). துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் தலைமைக் காவலர் கலைவாணிக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கமுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கலைவாணி உறங்கச் சென்றுள்ளார். அப்போது கலைவாணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடன் வந்திருந்த மற்ற காவலர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் போலீஸாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















