அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்...
பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதலா? - தமிழக அரசு விளக்கம்
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்று வரும் கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்த ஒரு விடியோ வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
இந்த அணியின் பயிற்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக தில்லியில் தங்கவைக்கப்பட்டு பின்னர் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உத்தரவையடுத்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இயக்குநர், பஞ்சாப் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கபடி அணி பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.