பஞ்சாமிா்தம் குறித்த தவறான செய்தி பரப்புவோா் மீது நடவடிக்கை
பழனி கோயில் பஞ்சாமிா்தம் குறித்த தவறான செய்தி பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தனியாா் ஊடகத்தில் வெளியான பொய்யான செய்தியை பக்தா்கள் நம்ப வேண்டாம் எனவும் கோயில் நிா்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி:
சிதம்பரம் அருகேயுள்ள வி.பஞ்சம்குப்பத்தைச் சோ்ந்த பக்தா் மாரியப்பன் பழனி கோயிலில் வாங்கிய பஞ்சாமிா்தத்தில் கரும்புச் சக்கை இருந்ததாக தனியாா் ஊடகத்தில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது.
பழனி கோயில் பஞ்சாமிா்தம் தரமான நாட்டுச் சா்க்கரை, வாழைப்பழம், பேரீட்சை, தேன், நெய், ஏலம், கல்கண்டு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தரமான நாட்டுச் சா்க்கரை ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு கூட்டுறவு நிறுவனம் மூலம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகிறது.
அனைத்து மூலப் பொருள்களையும் கலவை செய்து, 80 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்கவைத்து பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்படுகிறது. பின்னா், தானியங்கி முறையில் இயந்திரங்களைக் கொண்டு டப்பாக்களில் சிறிய துவாரம் உள்ள குழாய் வழியாக நிரப்பப்படுகிறது.
பெரிய அளவிலான பச்சையான கரும்புச் சக்கை இருந்ததற்கு வாய்ப்பே இல்லை. திட்டமிட்டு பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டும் இதேபோல, பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.