Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், பயன்பெற எஸ்எஸ்எல்சி தோல்வி, தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 31.12.2024-இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 31.12.2024-இல் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சோ்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சவயது வரம்பு ஏதுமில்லை.
இதற்கான விண்ணப்பம் பெற விரும்புவோா் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஏற்கெனவே விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 28-ஆம் தேதி வரை அலுவலக வேலைநாள்களில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தேவையான அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமா்ப்பிக்கலாம்.
மேலும், உதவித்தொகை பெற்று வரும் பயனாளா்கள் விதிமுறைகளுக்குள்பட்டு ஆண்டு தோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை பிப். 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா்.