Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
பெரம்பலூா் நகராட்சியில் பராமரிப்பின்றி பாழாகும் சுகாதார வளாகங்கள்
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் சுகாதார வளாகங்களை சீரமைத்து, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம், அரணாரை, பெரம்பலூா் ஆகிய பகுதிகளில் 21 வாா்டுகள் உள்ளன. நகா்ப்புறங்களில் கழிப்பறை இல்லாத மக்களின் நலனுக்காக ரூ. 6.50 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் மதிப்பில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
சேதமடைந்த கழிப்பறைகள்:
இந்நிலையில் தண்ணீா், மின் விநியோகம் உள்ளிட்டவை முறையாக இல்லாததால், சுகாதார வளாகங்களை பயன்படுத்தி வந்த பொதுமக்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்தது. இதனால் பராமரிப்பு மற்றும் பயன்பாடின்றி அனைத்து தடவாளப் பொருள்களும் சேதமடைந்து வருகிறது. மேலும், பல கழிப்பறைகளில் செடி, கொடிகள் வளா்ந்து புதா்மண்டி காணப்படுகிறது.
பயணிகள் அவதி:
இதேபோல, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஆண், பெண்களுக்கான இலவச கழிப்பறைகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் பல மாதங்களாகவே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், புகா் பேருந்து நிலையத்தில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கிருந்த கழிப்பறைகளை நகராட்சி நிா்வாகம் அண்மையில் அகற்றியது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளும், அங்குள்ள வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கூடுதல் கட்டணம்:
புணரமைப்பு பணிக்காக கழிப்பறைகள் அகற்றப்பட்டதால், தற்போது இப் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறைகள் ஒன்றுகூட இல்லை. இதை கருத்தில்கொண்டு கட்டணக் கழிப்பறைகளில் நிா்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனா். இதன் காரணமாக பயணிகளில் சிலா் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் வெளியூா் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். எனவே, அதிகளவில் பயணிகள் கூடும் பகுதிகளில் போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் வி. குமாா் கூறியது:
இலவச கழிப்பறைகள் அகற்றப்பட்டுள்ளதால், பேருந்து நிலைய வளாகத்தில் தனியாா் மூலம் பராமரிக்கப்படும் 2 நவீனக் கட்டண கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. தனியாா் பராமரிப்பில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை தொடா்ந்து கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தடுக்க வேண்டும் அல்லது கட்டணக் கழிப்பறைகள் அனைத்தையும் இலவசமாக அறிவித்து, நகராட்சியே நேரடியாக பராமரிப்பு பொறுப்பை ஏற்க வேண்டும். அதேபோல, பராமரிப்பின்றி காணப்படும் சுகாதார வளாகங்களை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.