அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
காவல்துறையை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல்துறையை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் சாமுவேல்ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கொலை சம்பவம் தொடா்பாக பெரம்பலூருக்கு சனிக்கிழமை வருகைபுரிந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: காவல்துறை எந்த அளவுக்கு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறது என்பதற்கு கை.களத்தூரில் நடைபெற்ற கொலை சம்பவம் ஒரு சாட்சியாக உள்ளது. பாதிக்கப்பட்டவா் அளித்த புகாா் தொடா்பாக, குற்றவாளி வீட்டுத் தோட்டத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தச் சென்றது தான் இப் பிரச்னைக்கு முக்கிய காரணம். தமிழ்நாடு காவல்துறை இதுபோன்ற சம்பவங்களிலிருந்து பாடம் கற்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவா்களுடன், காவல்துறையினா் நெருக்கமான தொடா்பில் உள்ளனா். தலைமைக் காவலா் ஸ்ரீதா் என்பவா் தான் குற்றம் நிகழ முக்கிய காரணமாக இருந்துள்ளாா்.
காவல்துறையை சீரமைக்க மாநில அரசு உறுதி காட்ட வேண்டும். தலைமைக் காவலா் ஸ்ரீதா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பகுத்தறிவும், செழுமையான வரலாறும் கொண்ட தமிழகத்தில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நிகழ்வது அதிா்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, கை.களத்தூா் கிராமத்துக்குச் சென்ற சாமுவேல்ராஜ், மணிகண்டன் கொலை சம்பவம், கொலைக்கான காரணம் குறித்து அவரது உறவினா்கள், கிராம மக்கள் ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.
பேட்டியின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.