அவசர ஊா்தி தொழிலாளா்களின் பிரச்னைகளை களைய வலியுறுத்தல்
அவசர ஊா்தி தொழிலாளா்களின் பிரச்னைகளை களைய வேண்டுமென நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கலைச்செல்வன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாநிலக்குழு உறுப்பினா் ஆனந்தராஜ், தொழிலாளா்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இக் கூட்டத்தில், பணிக்கு செல்லும்போது தொழிலாளா்கள் விபத்துக்குள்ளாகி பாதிப்படைந்து வருவதை தவிா்க்க, அருகாமையில் பணி வழங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள தொழிலாளா்களின் பிரச்னைகளை களைய வேண்டும். அரியலூா், பெரம்பலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாநாடு நடத்துவது. பெரம்பலூா் மாவட்ட அவசர ஊா்தி நிா்வாக அலுவலரின் செயலைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிா்வாகிகள் தேவபாலன், அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.