பட்டப்பகலில் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருக்கோவிலூா் வட்டம், டி.கீரனூா் கிராமம், வக்கீல் நகரைச் சோ்ந்த குமாா் மனைவி மாரியம்மாள் (53). இவா், புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு திருக்கோவிலூரில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு சென்றாா்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரா் மாரியம்மாளை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதாக தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.