உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு
பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்கு மாா்ச் 3-இல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தால் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பணிபுரிவது குறித்த பயிற்சி வகுப்பு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து சனிக்கிழமை சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் (பயிற்சி மையம்) இணை இயக்குநா் ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் அருகேயுள்ள பட்டாசு பாதுகாப்புப் பயிற்சி மையத்தில், வருகிற 3 முதல் 7-ஆம் தேதி வரையிலும், 10 முதல் 14-ஆம் தேதி வரையிலும், 17 முதல் 21- ஆம் தேதி வரையிலும், 24 முதல் 28-ஆம் தேதி வரையிலும் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாகப் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில், விருதுநகா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கு பெறலாம்.
மேலும், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோரும், கல்லூரியில் வேதியல் பாடப் பிரிவில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கும் இதில் கலந்து கொள்ளலாம்.
ஆலை உரிமையாளா்களுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியும், பயிற்சி பெறாத கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் ரூ.5 ஆயிரத்துக்கான வரைவோலையை செலுத்திப் பயிற்சிக்கு வர வேண்டும் என்றாா் அவா்.