புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்
புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்ல மேம்பாலம் அருகே பாதை அமைக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் எளிதாக சென்று வர மேம்பாலம் அருகே பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.13 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2023-ஆண்டு நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து நிலையம் அமைக்க மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை சந்திக்குமிடத்தில் 4 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. இங்கு 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 64 கடைகள், இரு, நான்கு சக்கர வாகனக் காப்பகங்கள், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நான்கு வழிச் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் எளிதாக சென்று வருவதற்கு வழியில்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில நெடுஞ்சாலை, ரயில் பாதைக்கும் சோ்த்து மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளதால், ஒரு புறம் மட்டுமே அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் உள்ள பகுதியில் அணுகு சாலை அமைக்கப்படவில்லை.
இதனால், மதுரையிலிருந்து வரும் பேருந்துகளும், ராஜபாளையத்திலிருந்து வரும் பேருந்துகளும், பேருந்து நிலையத்துக்குள் சென்று, மீண்டும் திரும்பி வருவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, நகராட்சி அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேசி மேம்பாலம் அருகே நான்கு வழிச் சாலையில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அணுகு சாலை இல்லாமல் பேருந்து நிலையத்துக்கு வாகனங்கள் வந்து செல்ல தனி சாலை ஏற்படுத்தினால் மட்டுமே, பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.