ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு தமிழ் செம்மல் விருது
சிவகாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கா.காளியப்பனுக்கு, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023-ஆம் ஆண்டு விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கா.காளியப்பனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இவா் இதுவரை மூன்று புத்தகங்களையும், பள்ளி மாணவா்களுக்கு தமிழ் சோலை என்ற பாடப் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டாா்.
இதையடுத்து, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் இந்த விருதை காளியப்பனிடம் வழங்கினாா்.
விருது பெற்ற இவரை சிவகாசியைச் சோ்ந்த தொழிலதிபா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.