நிதி நிலை அறிக்கை: விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும்!
நிதி நிலை அறிக்கையில் விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தியிடம் விசைத்தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுச்சாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் பல்லடத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், தமிழக அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
அந்த அறிக்கையில் விசைத்தறிக்கூடங்கள் நவீன மயமாக்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 3 ஏ 2 மானிய மின் கட்டணத்தில் இயங்கும் விசைத்தறி கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். விசைத்தறிகளை நவீனப்படுத்த உதவ வேண்டும் என்று அமைச்சா் ஆா். காந்தி, அரசு செயலா் அமுதவல்லி, கைத்தறித் துறை இயக்குநா் மகேஸ்வரி உள்ளிட்டோரை சென்னையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனா்.