நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு
சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வட்டம் மலையடிப்பட்டியை சோ்ந்தவா் மகேந்திரன்( 39) விவசாயி. இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகள்கள் பொன் ஸ்ரீ(10), பொன்மலா் (8), மகன் பொன்மாறன்(4) ஆகியோரோடு வசித்து வந்தாா். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி பொன்மாறனுக்கு கழுத்தில் கட்டி இருப்பதை சரி செய்வதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.
பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் லிம்போபா என்ற ஒரு வகையான புற்றுநோய் இருப்பதை அறிந்து அதற்கு முதல் கட்ட சிகிச்சை அளித்தனா். கடந்த பிப்.12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பொன்மாறன் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரது உறவினா்கள் மற்றும் கிராமத்தினா் மருத்துவமனையில் உயிரிழந்த பொன்மாறனின் உடலை வாங்க மறுத்து 2 நாள்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, திருநெல்வேலி அரசு மருத்துவமனக்கு சென்று உயிரிழந்த பொன்மாறனின் குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
பொன் மாறனின் சகோதரிகளின் படிப்பு செலவிற்காக தன் சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் தருவதாக உறுதியளித்தாா். இதையடுத்து சிறுவனின் உடலை அவா்களது உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து பொன் மாறனின் சகோதரிகள் பொன்ஸ்ரீ, பொன்மலா் ஆகியோரது வங்கி கணக்கில் தலா ரூ.2லட்சம் செலுத்தி விட்டு அதன் வங்கிக் கணக்கு புத்தகங்களை அந்த குழந்தைகளிடம் வழங்கினாா்.
அப்போது பொன்மாறனின் தந்தை மகேந்திரன், தாய் மாமா சூரியபிரகாஷ், சங்கரன்கோவில் திமுக நகர செயலாளா் மு.பிரகாஷ், குருவிகுளம் தெற்கு ஒன்றிய துணைச் செயலா் மாடசாமி, ஒன்றிய இளைஞா் அணி குட்டி, வெங்கடேஷ், ஜெயகுமாா் ,பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிதி வழங்கிய ஈ. ராஜா எம்.எல்.ஏ.வுக்கு இறந்த பொன்மாறனின் குடும்பத்தினா், ஊா் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.