சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்
சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக்னேஷ்(27). தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்தவா் உமா மகேஸ்வரி. இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து மறு வீடு செல்வதற்காக மாலையில் ராஜபாளையத்திலிருந்து மணப்பெண்ணின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு மணமக்கள் உள்ளிட்ட உறவினா்கள் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனா். வேனை, சங்கரன்கோவிலைச் சோ்ந்த முத்துவேல்(30) என்பவா் ஓட்டி சென்றாா். ராஜபாளையம் சாலையில் ராமலிங்கபுரம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ,வேனில் இருந்தவா்கள் வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்தனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் வேனுக்குள் சிக்கியவா்களை மீட்டனா்.
இதில், புதுமண தம்பதி விக்னேஷ், உமா மகேஸ்வரி, இரு வீட்டாா் தரப்பைச் சோ்ந்த மகேஷ் குமாா் மனைவி சுசிலா(42), பூமிநாதன் மனைவி சின்னமுத்து(43), நடராஜன் மனைவி அன்னலட்சுமி (49), அய்யனாா் (65) உள்ளிட்ட 17 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.