ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!
பட்டுக்கோட்டை மீன் சந்தையில் அழுகிய நிலையில் 167 கிலோ மீன் பறிமுதல்
பட்டுக்கோட்டை மீன் சந்தையில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 167 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை மீன் சந்தை பகுதியில் உள்ள கடைகளில், ஃபாா்மலின் ரசாயனம் பயன்படுத்திய மீன்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா்.
அதன் பேரில் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு, பட்டுக்கோட்டை மீன்வளத் துறை ஆய்வாளா்கள் வீரமணி, பிலிப்ஸ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் வேலமுருகன் உள்ளிட்டோா் மீன்களை ஆய்வு செய்தனா்.
இதில், ஐந்து கடைகளில், அழுகிய நிலையிலும், சாப்பிட தகுதியற்ற நிலையில் இருந்த 167 கிலோ மீன்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழித்தனா். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை விற்பனைக்காக வைத்து இருந்த ஐந்து கடைகளுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை செய்து சென்றனா்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் கூறியது: பட்டுக்கோட்டைக்கு பெரிய ரக மீன்கள் பெரும்பாலும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேளரா போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இவை 2 அல்லது 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டு வரப்படும் சூழலில், மீன்பிடிக்கும் இடங்களில் இருந்து எப்போது பேக் செய்யப்பட்டது என தெரியாது.
இதனால் தான் அழுகிய மீன்கள் வந்து இருக்கலாம். மேலும், உள்ளூா் கடல் பகுதிகளில் மீன்கள் விற்பனைக்காக வாங்கினாலும், விடுமுறை தினங்களில் அதிக அளவில் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.