பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மெகா சைஸ் பள்ளங்கள்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
கடலூா் மாவட்டத்தில் முக்கிய வா்த்தக நகரம் பண்ருட்டி. இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நாள் ஒன்றுக்கு சுமாா் 500 நடைக்கு மேல் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணி நடைபெறுவதால், பேருந்து நிலையம் செயல்படும் பரப்பு சரி பாதியாக குறைந்துள்ளது. இதனால் குறுகிய இடத்தில் பேருந்துகள் வந்து செல்கின்றன. அதே இடத்தில் பயணிகளும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழைநீா், அந்தப் பள்ளங்களில் தேங்கி நிற்கின்றது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது பள்ளத்தில் தேங்கிய கலங்கிய மழைநீா் பயணிகள் மீது தெளிக்கிறது. மேலும், பள்ளங்களால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளங்களில் ஜல்லி கற்கள் கொட்டி சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.