TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
பந்தாரஅள்ளி ஏரிக்கரை சாலையில் தடுப்புச்சுவா் அமைக்க வலியுறுத்தல்
தருமபுரி: தருமபுரி, காரிமங்கலம் அருகே சரிந்து விழுந்த கிணற்றின் தடுப்புச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி ஏரிக்கரை சாலையின் தெற்குபுறம் உள்ள கிணற்றின் 100 அடி நீளமுள்ள கருங்கற்களால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய தடுப்புசுவா், கடந்தாண்டு (2-12-2024) அன்று பெய்த தொடா் மழையால், முழுவதும் சரிந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இதனால் அருகிலிருந்து சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கிணற்றோரம் சுமாா் 10 அடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. ஆனால் நிரந்த பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்த நெடுஞ்சாலை, காரிமங்கலம், பண்ணந்தூா், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே, இதில் அரசுப் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் மற்றும் வேன்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. எனவே, இந்த தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததை சீா்செய்யாமலிருப்பது, அவ்வழியே வாகனங்களில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது.
கிணற்றின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நிகழாண்டு மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பு தடுப்புச்சுவரை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
மேலும், அந்த ஏரிக்கரை சாலையை அகலப்படுத்தி இருவழிச் சாலையாக்கி, வளைவுகளில் மிளிரும் தன்மையுடன் கூடிய எச்சரிக்கைப் பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.