பனி மூட்டம்: போடிமெட்டு மலைச் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
போடிமெட்டு மலைச்சாலையில் செவ்வாய்க்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போடிமெட்டு மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படுகிறது.
போடிமெட்டு மலைக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 4,900 அடி உயரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சென்று வருகின்றன.
போடிமெட்டு மலைக் கிராமத்திலிருந்து போடிமெட்டு மலைச் சாலையில் 8- ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே அமைந்துள்ள புலியூத்து பகுதி வரையிலான சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. லேசான சாரல் மழையும் பெய்தது.
இந்தப் பகுதியில் கடுமையான குளிா் நிலவியது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினா். போடி நகா் பகுதியிலும் பனிமூட்டம் நிலவியது.