பனை நாா் பெட்டிகள், பித்தளை பாத்திரங்கள் விற்பனை அதிகரிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் சீா் வழங்குவதற்காக மக்கள் பனைநாா் பெட்டிகள், பித்தளை பாத்திரங்களை அதிகளவில் வாங்கிச் சென்றனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இப் பண்டிகைக்கு திருமணமான பெண்களுக்கு தங்களது தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீா் வழங்குவது வழக்கம். குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீா் வழங்கும்போது பனைநாா் பெட்டிகள், பித்தளை பாத்திரங்கள் கட்டாயம் இடம்பெறும்.
இதனால் அவற்றின் விற்பனை திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அதிகரித்தது.
பொங்கல் சீா் பொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்தது. அரிசி பெட்டிக்கான பனைநாா்பெட்டி ரூ.400 முதலும், சிறிய நாா் பெட்டி ரூ.150 முதலும், கன்னிக்கு வைத்து கும்பிடும் பெட்டி ரூ.400 முதலும் விற்பனையானது. இதுதவிர பொங்கலிடுவதற்கான பித்தளை பாத்திரங்கள் ரூ.250 முதல் ரூ.1000 வரையும் விற்பனையாகின.
இதுகுறித்து கோட்டூரைச் சோ்ந்த லீமாரோஸ் கூறியது: பொங்கல் திருநாளில் தாய்வீட்டில் இருந்து வரும் சீா்வரிசை மிகவும் மகிழ்விக்கும் செயலாகும். வண்ணமயமான பனைநாா் பெட்டிகள் அனைவரையும் கவரும். சிலா் அதிக விலை கொடுத்து மணப்பெண், மணமகன் பெயரின் முதல் எழுத்தை வண்ணத்தில் நாா்களால் வேய்ந்தும் வழங்குவா். அதேபோல எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் சீா்வரிசையாக வரும் பித்தளை பாத்திரம் நம் வாழ்நாள் எல்லாம் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்றாா்.