பன்னாட்டு பேச்சரங்கில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு பேச்சரங்கில் முதலிடம் பெற்ற திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறையைச் சாா்ந்த முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவி ரா. பிரித்தி மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்க சொற்போா் எனும் பன்னாட்டு பேச்சரங்க நிகழ்வில் பங்கேற்றாா். இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், மொரிஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்ற நிலையில், இந்தியா சாா்பில் பங்கேற்ற பிரித்தி முதலிடம் பெற்றாா்.
இதையடுத்து, கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், திருவிக கல்லூரி பொறுப்பு முதல்வரும், இயற்பியல் துறைத் தலைவருமான துரை. பென்னி அன்புராஜ், இயற்பியல் துறை பேராசிரியா்கள் பி. ரவீந்திரன், ஜி. நெடுஞ்செழியன், நுண்கலை மன்றத் தலைவா் எஸ். கோதண்டராமன் ஆகியோா் மாணவி ரா. பிரித்தியை பாராட்டினா்.