பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கலுக்கு சென்னையில் இருந்து திருவாரூா் வழியாக காரைக்குடி மற்றும் காரைக்காலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். இதேபோல, பொங்கல் முடிந்த பிறகு காரைக்குடி மற்றும் காரைக்காலில் இருந்து திருவாரூா் வழியாக சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் ரயில்கள் இயக்க வேண்டும்.
தவிர, நாள்தோறும் திகாலையில் விழுப்புரத்தில் இருந்து காரைக்குடி வரை ஒரு பயணிகள் ரயில் இயக்கவும், மீட்டா் பாதை காலத்தில் இயங்கியது போல் காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை திருவாரூா் வழியாக சென்னை எழும்பூருக்கு நாள்தோறும் இரவிலும், பகலிலும் இரு மாா்க்கத்திலும் ரயில்கள் இயக்க வேண்டும்.
மேலும், வேளாங்கண்ணியில் இருந்து மதுரைக்கும், கன்னியாகுமரிக்கும் நாள்தோறும் ரயில் இயக்க வேண்டும். புனலூா்- மதுரை ரயிலை காரைக்கால் வரை நீடிக்க வேண்டும். காரைக்கால்-திருவாரூா்- தஞ்சாவூா் பாதையையும், திருவாரூா்- மயிலாடுதுறை பாதையையும் இரட்டை வழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.