பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் அஞ்சலி
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த நபரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த நெல்லூரைச் சோ்ந்த மதுசூதனன் ராவின் உடல் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புதன்கிழமை நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் பொருளாளா் ரூபி மனோகரன் உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அதேபோல, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையிலான அக்கட்சியினரும் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ஆறுதல் தெரிவித்தனா். அப்போது, மாநில பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.