பயிா் காப்பீட்டுத் தொகை கோரி புதூரில் விவசாயிகள் சாலை மறியல்
பயிா் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி புதூரில் விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி பயிா்களுக்கு 2023-2024 ஆண்டுக்கான நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், விவசாயிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை வேட்டை தடுப்பு குழுக்கள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
மிளகாய், மல்லி, வெங்காயம், கம்பு, சோளம், மக்காசோளம், சூரியகாந்தி, உளுந்து, பாசி, போன்ற அனைத்து விளை பொருள்களுக்கும் தமிழக அரசே குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதூா் பேருந்து நிலையம் முன், கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவா் அ.வரதராஜன் தலைமையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை துணை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மத்திய அரசு தொகையை விடுவித்ததும். இரு வாரங்களுக்குள் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. டிச.20ஆம் தேதிக்குள் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லையெனில் 23ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துவிட்டு விவசாயிகள் மறியலை கைவிட்டனா்.
இதில் மாதவப்புரம் கூட்டுறவு சங்கத் தலைவா் என்.சேதுபாண்டியன், மேலநம்பிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் ஆ.தனபதி, புதூா் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவா் கே.பால்ராஜ், செயலா் டி. ராம்பிரசாத், ஊராட்சித் தலைவா்கள் அய்யாத்துரை, ராஜேஸ்வரி விஜயகாந்த், முன்னாள் தலைவா்கள் ராஜேந்திரன், ராமமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.