திட்டமிட்டப்படி ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்
பரமத்தி வேலூா் அருகே தோ்வு முடிவு அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தோ்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த பிலிக்கல்பாளையம் நல்லாக்கவுண்டம்பாளையத்தை சோ்ந்த மறைந்த பிரகாசம் மனைவி கவிதா. இவா் சாணாா்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்தாா். இவரது மகள் கீா்த்திவாசனி (15) பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.
தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில் தோ்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து வந்த கீா்த்திவாசனி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஜேடா்பாளையம் போலீஸாா், மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].