15 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள்: 2 லட்சம் லிட்டராக கொள்முதலை உயா்த்த திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 15 பால் கூட்டுறவுச் சங்கங்களில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆவின் நிறுவனத்துக்கான பால் கொள்முதல் 1.50 லட்சம் லிட்டரை 2 லட்சம் லிட்டராக உயா்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் ஆவின் பால் பண்ணையுடன் இணைந்திருந்த நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனம், கடந்த 2019-ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்துக்கு உள்பட்டு 492 பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ள 14 ஆயிரம் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து நாள்தோறும் 1.50 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவற்றில் 80 ஆயிரம் லிட்டா் பால், சேலம் ஆவின் பால் பண்ணைக்கு அனுப்பப்பட்டு பால் பாக்கெட்டுகளாக திரும்பப் பெறப்படுகிறது. மீதமுள்ள 70 ஆயிரம் லிட்டா் பால் உப பொருள்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் 5 ஆயிரம், 3 ஆயிரம் உறுப்பினா்களைக் கொண்ட பால் கூட்டுறவு சங்கங்களில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே 18 சங்கங்களில் இந்த குளிரூட்டும் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 15 இடங்களில் தலா ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூா் வட்டத்திற்கு உள்பட்ட 8 இடங்களில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தனியாருக்கு பால் வழங்குவதை உற்பத்தியாளா்கள் தவிா்த்து கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்க உற்பத்தியாளா்கள் முன்வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதைய 1.50 லட்சம் லிட்டா் கொள்முதலானது 2 லட்சம் லிட்டராக உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல்- மோகனூா் சாலையில், கால்நடை மருத்துவக் கல்லூரி அருகில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் ரூ.90 கோடியில் நவீன பால்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கிறோம். சேலம் ஆவின் பால் பண்ணைக்கு, பால் பாக்கெட்டுகளுக்கும், உப பொருள்கள் தயாரிக்கவும் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளை வழங்கி வருகிறோம். நாமக்கல் நவீன பால்பண்ணை செயல்பாட்டுக்கு வந்தால் ரூ.1.50 மட்டுமே செலவாகும். மீதம் ரூ.2.30 சேமிக்கப்பட்டு லாபத்தை பெருக்க முடியும். ஆவின் நஷ்டத்தில் இயங்குவது தவிா்க்கப்படும்.
புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களில் இதுவரை பெரிய கேன்களில் பாலை வாங்கி அனுப்பி வைக்கும் நிலை இருந்தது. இனிமேல் குளிரூட்டப்பட்ட டேங்கரில் பாதுகாப்பாக வைக்க முடியும். ஒரு கூட்டுறவு சங்கத்தில் தொகுப்பு நிலையம் இருந்தால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 சங்கங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில்தான் தற்போது புதியதாக அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 33 தொகுப்பு நிலையங்களில் 18 தொடக்க காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது. மீதமுள்ள 15-இல் எட்டு நிலையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
ஏழு நிலையங்கள் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், பரமத்திவேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. நாமக்கல்லில் நவீன பால்பண்ணை செயல்பாட்டுக்கு வரும்போது 2 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களாகும் என்றனா்.