கடைகள், வணிக நிறுவனங்களில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத ஆட்சியா் அறிவுரை
நாமக்கல் மாவட்டத்தில், கடைகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் காணும் வகையில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு டிச. 31-இல் கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வா் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா். அந்த அறிவிப்பின் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளா்கள் ‘தினம் ஒரு திருக்குறளை’ தொழிலாளா்கள், பொதுமக்கள் படிக்கும் வகையில் பொருள் விளக்கத்துடன் எழுதி காட்சிப்படுத்த வேண்டும்.
தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் திருக்குறளும் அதன் உரையையும் எழுதும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தொழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும்போது தொழிலாளா் ஆணையா் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.