பரவிய வதந்தி: வாகனங்களுக்கு தீவைப்பு, கலவரம்; 144 தடையுத்தரவு... நாக்பூரில் என்ன நடந்தது?
மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் இருக்கிறது. அக்கல்லறையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுந்துள்ளது. ஆளும் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளே இக்கோரிக்கையை விடுத்துள்ளன. இதையடுத்து இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
காலையில் இருந்து அமைதியாக சென்று கொண்டிருந்த போராட்டம் மாலையில் வன்முறையில் முடிந்தது. அதுவும் ஆர்.எஸ்.எஸ்.தலைமையகம் இருக்கும் நாக்பூர் நகரில் இந்த வன்முறை ஏற்பட்டது. நேற்று இரவு 8 மணியளவில் நாக்பூரில் உள்ள மகால் என்ற இடத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை அருகே பஜ்ரங் தளத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.

சோசியல் மீடியாவில் பரவிய வதந்தி:
அவர்கள் அக்கூட்டத்தில் ஒரு புகைப்படத்தை எரித்துள்ளனர். அதில் குரான் தான் எரிக்கப்பட்டதாக சோசியல் மீடியாவில் வதந்தி தீயாக பரவியது. இதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் ஆங்காங்கே ஒன்று கூடினர். அவர்கள் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகாரும் செய்தனர். ஆனாலும் பின்னர் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் தீவைக்கப்பட்டது. அதனை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களுக்கும் தீவைத்தனர். கலவரத்தை கட்டுப்பட்டுத்த போலீஸார் கண்ணீர் புகைக்குண்டை வீசி கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சுத்தாக்குதலில் 4 போலீஸார் காயம் அடைந்தனர்.
144 தடை உத்தரவு
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டது. சம்பவ பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதட்டமான சூழ்நிலை இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் சந்தக் தெரிவித்தார். மக்கள் வதந்தியை நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் சந்தக் கூறுகையில்,''தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. கூட்டம் கூடியவர்கள் ஒரு போட்டோவை எரித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கலவரம் இரவு 8 முதல் 8.30 மணிக்கு தொடங்கியதில் பல வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கல்கள் வீசப்பட்டதில் தீயணைப்பு துறை வீரர்கள், போலீஸார் காயம் அடைந்துள்ளனர்''என்று தெரிவித்தார்.
மொத்தம் 40 வாகனங்கள் எரிக்கப்பட்டது. 2 ஜே.சி.பி இயந்திரங்கள், போலீஸ் வாகனங்களும் இதில் அடங்கும். இரண்டு ஐ.பி.எஸ்.அதிகாரிகள் கல்வீச்சில் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
`வதந்தியை நம்பவேண்டாம்' -நிதின் கட்கரி
இது குறித்து நாக்பூர் தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' மக்கள் அமைதி காக்கவேண்டும். தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவாதம் கொடுத்துள்ளார். எனவே யாரும் வதந்தியை நம்பவேண்டாம்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பட்னாவிஸ் வெளியிட்ட அறிக்கை:
முன்னதாக முதல்வர் பட்னாவிஸ் வெளியிட்ட அறிக்கையில், நாக்பூர் அமைதியான நகரம். மக்கள் ஒருவருக்கொருவர் துக்கம் மற்றும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு ஒற்றுமையாக வாழ்கின்றனர். எனவே வதந்தியை நம்பவேண்டாம். கல்வீச்சுத்தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட நிலைமை போலீஸார் கையாண்டு வருகின்றனர். மக்கள் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

பஜ்ரங் தள பிரமுகர்கள் விளக்கம்:
இது குறித்து பஜ்ரங் தள பிரமுகர்கள் கூறுகையில், நாங்கள் போராட்டத்தில் குரானை எரிக்கவில்லை. ஔரங்கசீப் புகைப்படத்தைத்தான் எரித்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விஜய்:
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விஜய் இது குறித்து கூறுகையில்,''திட்டமிட்டு வெறுப்பை பரப்பவும், இரு பிரிவினர் இடையே வன்முறையை ஏற்படுத்தவும் முயற்சி நடக்கிறது. இச்செயலை ஆளும் கட்சியே செய்கிறது. அமைச்சர்களின் பொறுப்பற்ற அறிக்கையால் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர்களை முதல்வர் உடனே பதவியில் இருந்து நீக்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks