பரஸ்பர வரி 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பு: அமெரிக்கா
வாஷிங்டன்: பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரியை 3 மாதங்களுக்கு அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிப்பதாக குற்றஞ்ச்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும் என்றும் அறிவித்தாா்.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.
இந்த நடைமுறையால் உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வா்த்தகப் போா் பதற்றம் ஏற்பட்டதுடன், சா்வதேச பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெஸென்ட் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘பெரும்பாலான நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரி, 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுகின்றன. ஆனால் அனைத்து நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்’ என்றாா்.