பரஸ்பர வரி அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வு!
மும்பை: வலுவான மேக்ரோ தரவுகள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியதாலும் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் இன்று சுமார் 593 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது.
வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 655.84 புள்ளிகள் உயர்ந்து 76,680.35 ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து 76,617.44 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 166.65 புள்ளிகள் உயர்ந்து 23,332.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோமொபைல், வங்கி மற்றும் ஐடி பங்குகளை முதளிட்டாளகள் வாங்கியதும், மார்ச் மாத உற்பத்தித் துறை வளர்ச்சியானது எட்டு மாத உயர்வை எட்டியதால் இது உள்நாட்டு பங்குச் சந்தையின் மீட்சிக்கு உத்வேகம் அளித்தது.
அமெரிக்க வரி அறிவிப்புகளுக்கு முன்னதாக எஃப்ஐஐ தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததால் நேற்று (செவ்வாய்கிழமை) சென்செக்ஸ் 1,390 புள்ளிகளும், நிஃப்டி 353 புள்ளிகளும் சரிந்து முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி, டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பங்குகள் உயர்ந்தும் அதே வேளையில் நெஸ்லே, பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
நிஃப்டி-யில் டாடா கன்ஸ்யூமர், சோமேட்டோ, டைட்டன் கம்பெனி, இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் கார்ப், எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்த நிலையில் எஃப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியாலிட்டி ஆகியவை 1 முதல் 3 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.
இதற்கிடையில் சோமேட்டோ கிட்டத்தட்ட 5 சதவிகிதமும், அதைத் தொடர்ந்து டைட்டன் கிட்டத்தட்ட 4 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, கஜாரியா செராமிக்ஸ், ஐஓபி, கோல்கேட் பாமோலிவ், பிர்லாசாஃப்ட், மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர், சோனா பிஎல்டபிள்யூ, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 85 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வாரம் குறைந்த விலையை பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் ஷாங்காய் உயர்ந்தும் சியோல் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தது.