பலூசிஸ்தான்: மர்ம கும்பலின் தாக்குதல்களில் 4 காவலர்கள் உள்பட 8 பேர் பலி!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பல் நடத்திய இருவேறு தாக்குதல்களில் 4 காவலர்கள் மற்றும் 4 தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலூசிஸ்தானின் காரிபாபாத் பகுதியில் இன்று (மார்ச் 23) ரோந்து பணியில் ஈடுபட்ட பாகிஸ்தான் காவல் துறையின் வாகனத்தின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 காவலர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவயிடத்துக்கு விரைந்த அந்நாட்டு அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?
இதேபோல், கலாத் மாவட்டத்தின் மாலாங்சாய் பகுதியில் ஆழ்துளைக் கிணறு துளையிடும் தொழிலாளர்கள் நான்கு பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட நான்கு தொழிலாளிகளும் பஞ்சாப் மாகாணத்தின் சாதிக்காபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில் தற்போது வரை இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, பலூசிஸ்தான் மக்கள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு மாயமாக்கப்படுவதை எதிர்த்து பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழலில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.