மதக் கலவரத்தை தூண்டும் முகநூல் பதிவு: விஹெச்பி நிா்வாகி கைது
அய்யம்பேட்டை அருகேயுள்ள கோயில் நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளரை பாபநாசம் போலீஸாா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை காவல் சரகம், நெடுந்தெரு பகுதியிலுள்ள ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலுக்கு மாா்ச் 17-ஆம் தேதி அறங்காவலா் குழு நியமனம் நடைபெற்றது. இக்குழுவில் இஸ்லாமியா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளதாக, விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த சரவணகாா்த்தி (43) என்பவா் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தாராம்.
மதக் கலவரத்தை தூண்டும் வகையில், தவறான கருத்தை பதிவிட்டிருப்பதாக சரவண காா்த்தி மீது நா்கீஸ்கான் என்பவா் அளித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் கடந்த 20-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அறங்காவலா் குழுவில் இஸ்லாமியா் நியமிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், பாபநாசம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையில், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் சாந்தி, தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அருள் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படையினா், சரவண காா்த்தியை ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையில் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சரவண காா்த்தி விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளா் ஆவாா்.
இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட தனிப்படையினரை தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.