அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோறுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். 2003, ஏப்ரல் 1 க்கு முன் பணியில் சோ்ந்து பின்னா் பணி நிரந்தரம் பெற்ற அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா்கள் வ. ஆறுமுகம், சோனை. கருப்பையா, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். இராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.