பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்
பள்ளி மாணவிகள் தற்காப்பு பயிற்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு பயிற்சிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள ராணி லட்சுமிபாய் தற்காப்பு கலைப் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2015 முதல் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) தற்காப்பு பயிற்சிக்காக 6,045 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.7.25 கோடி மற்றும் 5,804 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்காப்பு பயிற்சிகள் வழங்கவும், பயிற்சியாளா்கள் சம்பளம் மற்றும் மாணவிகளுக்கான சிற்றுண்டி செலவீனத்தை மேற்கொள்ளவும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். தற்காப்பு கலைப் பயிற்சியாளா்களை பள்ளி மேலாண்மைக் குழுக்களே தோ்வு செய்ய வேண்டும்.
மேலும், பெண் ஆசிரியைகள் மேற்பாா்வையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக, மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருள்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடா்பாக பயிற்சியில் கற்றுத் தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.