"8 மணிநேர வேலை வேண்டும்; நான் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும்" - ராஷ்மிகா ப...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம்; அனுமதி வழங்கி துணை நிற்கும் அரசு நிர்வாகம்? - முழு பின்னணி
சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்கு புறம்பாக குடியிருப்பு கட்டுமானங்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர் கட்டுமான குழுவும் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
சதுப்புநிலம் என்றால் என்ன?
ஆண்டுமுழுவதும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு நீர் நிரம்பியோ அல்லது நீர் தோய்ந்தோ இருக்கும் நிலத்தை, நிலம் என்றும் நீர்நிலம் என்றும் திட்டவட்டமாக சொல்ல முடியாது. அதனை ‘சதுப்புநிலம்’ என வரையறுக்கப்படுகிறது.
அதாவது, நிலமும் நீரும் இணையும் இடைப்பட்ட பகுதி. சகதி நிறைந்த, ஆழம் குறைந்த நீர்பிடிப்புப் பகுதியாக இது விளங்கும்.

ஈரப்பதத்துடன் இருக்கும் இந்த நிலத்தில், நீரில் வாழும் அல்லது அதிகப்படியான ஈரப்பதத்தை தாங்கும் தாவரங்கள் மட்டுமே வளரும். உதாரணமாக, அலையாத்திக் காடுகளைக் குறிப்பிடலாம்.
இந்த சதுப்பு நிலங்கள் நன்னீர், உப்புநீர் என இருவகையாக இருக்கும். பிச்சாவரம், சுந்தரவனம் போன்றவை உப்புநீர் சதுப்பு நிலம். பள்ளிக்கரணை, வேடந்தாங்கள் போன்றவை நன்னீர் சதுப்பு நிலம் என குறிப்பிடப்படுகிறது.
சுற்றுச் சூழல் முக்கியத்துவம்
இந்த சதுப்பு நிலங்களும் ஈரநிலங்களும் மழை, வெள்ளம் போன்ற சூழல்களில் நீரை உறிஞ்சி சேமிப்பதால் வெள்ளப் பாதிப்பை கட்டுக்குள் வைக்கும். நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரில் இருக்கும் மாசுக்களைக் கட்டுப்படுத்தி, வடிகட்டி நீர்நிலைகளுக்கு அனுப்பும். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க நீரை சேமித்து உதவும்.
அலையாத்திக் காடுகள் போன்ற தாவரங்கள் மூலம் கடலரிப்பு, சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்த்து அரணாக நிற்கும்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக, மீன்கள், ஊர்வன, உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கிச் செல்லும் விருந்தினர் மாளிகை சதுப்பு நிலங்கள். இனப்பெருக்கம் செய்யும் பறவைகளுக்கும் சில உயிரினங்களுக்கும் இதுபோன்ற சதுப்பு நிலம்தான் உகந்த இடமாக கருதப்படுகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் மட்டும் 65 வகையான வலசைப் பறவைகள், 105 வகையான உள்ளூர் பறவைகள், 50 வகை மீனினங்கள், 34 வகை வண்ணத்துப் பூச்சிகள், 20 வகை தட்டான்கள், 24 வகை ஒட்டுடலிகள், 15 வகை பாம்புகள், 8 வகை கரப்பான்கள், 10 வகை பல்லிகள், 78 வகை மிதவை உயிரினங்கள், 11 வகை இருவாழ்விகள், 10 வகை பாலூட்டிகள் மற்றும் 167 வகையான தாவரங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் வாழ்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சதுப்பு நிலப் பாதுகாப்பு
அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் சதுப்புநிலப் பகுதிகளை உலகளவில் பாதுகாக்க வேண்டும். மேலும், சதுப்புநிலப் பகுதியை ஒட்டிவாழும் மக்களின் வாழ்க்கைமுறையையும் சுற்றுச்சூழலையும் காக்கும் வகையில் அதன் பயன்பாட்டைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், சர்வதேச ஈரநிலப் பகுதிகளை (Wetlands) பாதுகாக்கும் ‘ராம்சார்’ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஈரானின் ராம்சார் நகரத்தில் கையெழுத்தானது. அதனால், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்படும் நிலங்களை ‘ராம்சார் நிலம்’ எனக் குறிப்பிடுகின்றனர். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட 170 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சுற்றுச்சூழல் அமைப்பில் கவனம் செலுத்தும் சர்வதேச ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின்படி, சதுப்புநிலங்களையும் அவற்றின் வளங்களையும் பாதுகாப்பது, மேலும் அவற்றுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பைப் வழங்குவது முக்கியக் கடமையாகிறது. பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழிடம் வழங்குவது, நீர் சுத்திகரிப்பு, பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
சதுப்புநிலமும் தமிழ்நாடும்:
செப்டம்பர் 2025 நிலவரப்படி, உலகளவில் மூன்றாவது மிகப்பெரும் ராம்சார் நிலங்களை கொண்டிருப்பது இந்தியா. 13,60,719 ஹெக்டேர்களை உள்ளடக்கிய 93 ராம்சார் தளங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது (2025 நிலவரப்படி) 13 ராம்சார் தளங்கள் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க இடங்களாக மூன்று இடங்களைப் பட்டியலிடலாம்.
சென்னை நகரத்துக்கு நடுவில் இருக்கும், சென்னையில் மீதமுள்ள ஒரே இயற்கைச் சதுப்புநிலப் பகுதியான பள்ளிக்கரணை.
இந்தியாவின் மிகப்பெரும் மாங்க்ரோவ் வனங்களில் ஒன்றான பிச்சாவரம்.
கொடைக்கானலில் இருக்கும் கொடியக்கரை (Point Calimere) ஆகியவை முக்கியமான பகுதிகளாகும்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம்:
தமிழ்நாட்டின் முக்கியமான சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை, நீர்ப்பாசனம், மழைநீர் சேமிப்பு, வெள்ளநீர் கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. 100க்கும் மேற்பட்ட வனமரங்கள் மற்றும் நீர்வாழ்த் தாவரங்கள் இருக்கும் இந்தப் பகுதி, நகர வெப்பநிலையை குறைக்கிறது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, சர்வதேச ஒப்பந்தங்களால் பாதுகாக்கப்படும் ராம்சார் இடத்தில் தான், சட்டத்தை மீறி பல முறைகேடுகள் செய்து, 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

என்ன நடந்தது?
இது தொடர்பாக பேசிய அறப்போர் இயக்கத்தின் ஜெயராம்:
``பள்ளிக்கரணையை ராம்சார் நிலமாக அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். அதற்குப் பிறகு மத்திய அரசு அதை ராம்சார் ஒப்பந்த அமைப்புக்கு அனுப்பும்.
170 நாடுகள் உறுப்பினராக இருக்கும் அந்த ராம்சார் ஒப்பந்த அமைப்பு, சதுப்புநிலங்களுக்கான வரையறைக்குள் அந்த நிலம் வருகிறதா எனச் சோதித்து, அதன் பிறகுதான் அதைப் பாதுகாக்கும் சட்டத்துக்குள் கொண்டு வர அங்கீகரிக்கும். இந்த அனைத்து நடைமுறைகளின் பின்னரே அந்த நிலங்கள் 'ராம்சார் நிலங்கள்' என அறிவிக்கப்படும்.
எனவே, ராம்சார் ஒப்பந்தத்தின்படி, 2007 முதல் 2014 வரை மொத்தம் 4 G.O. வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சில ஆக்கிரமிப்புகள் இருந்தபோதிலும், 690 ஹெக்டேர் (அதாவது 1705 ஏக்கர்) சதுப்பு நிலங்களை வனத்துறைக்கு அரசு ஒப்படைத்துள்ளது.
தனியாரிடம் சதுப்பு நிலம்:
இதனைத் தவிர, 1375 ஏக்கர் சதுப்பு நிலம் பல்வேறு காலகட்டங்களில் அரசு துறைகளுக்கும், முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு தனியாருக்கும் செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட நிலங்களில் ஒரு பகுதியே பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனம் சொந்தமாகக் கொண்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (சர்வே எண்: 453, 495, 496, 497, 498).

வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 1705 ஏக்கரும், மற்ற அரசுத்துறைகள் மற்றும் தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட 1375 ஏக்கர் சதுப்புநிலமும் என மொத்தம் 3080 ஏக்கர் நிலம் ஏப்ரல் 8, 2022 அன்று ராம்சார் நிலமாக அறிவிக்கப்பட்டது. அந்த 3080 ஏக்கர் நிலத்துக்கான வரைபடமும் தமிழ்நாடு ஈரநிலப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் உள்ளது.
எனவே, இந்த 3080 ஏக்கர் சதுப்பு நிலத்தில், ஏப்ரல் 2022 குப் பிறகு எந்தக் கட்டுமானமும் அனுமதிக்கக் கூடாது. 2017 லிலேயே இந்திய அரசு ராம்சார் நிலங்களில் எந்தவிதமான கட்டிடங்களோ, கட்டமைப்புகளோ கட்டக் கூடாது என சட்டம் இயற்றியிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால், பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் (Brigade Morgan Heights) என்ற கட்டுமான நிறுவனம் சொந்தம் கொண்டுள்ள நிலம், அரசின் அதிகாரப்பூர்வ சதுப்பு நில வரைபடத்தின்படியே, பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் எல்லைக்குள் வருகிறது.

மூன்று துறைகளின் முறைகேடு
இதைக் மறைத்து, பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் நிறுவனம் “பள்ளிக்கரணையில் இருக்கும் தங்கள் நிலம் ராம்சார் பகுதி அல்ல. குடியிருப்பு அமைவிருக்கும் இடத்துக்கும் ராம்சார் நிலப்பகுதிக்கும் 1.2 கி.மீ. இடைவெளி இருக்கிறது” எனக் கட்டடப் பணிக்கு அனுமதி கோரி ஜூலை 2022 ல் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பிக்கிறது.
அதைத் தொடர்ந்து, இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய வனத்துறை, “எங்கள் வனப் பாதுகாப்புப் பகுதியிலிருந்து 650 மீட்டர் தூரத்தில்தான் பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் நிலம் இருக்கிறது” என ஒரு அறிக்கை வழங்குகிறது.
இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு, சுற்றுச்சூழல் துறை “பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட ஐந்து சர்வே எண்கள் இருக்கும் பகுதிகளும் ராம்சார் சதுப்பு நிலப் பகுதி இல்லை” எனப் பொய்யாக அறிக்கை தயாரித்து ஜனவரி 20, 2025 ல் கட்டுமானத்துக்கு அனுமதி வழங்குகிறது.
இந்த அனுமதி வழங்கப்பட்ட மூன்றாவது தினமே, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) கட்டுமானப் பணியைத் தொடங்க ஒப்புதல் அளித்து உத்தரவிடுகிறது. உடனடியாக கட்டடப் பணிகளும் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், செயலாளர்கள், CMDA நிர்வாகம், முதல்வர் ஸ்டாலின், மத்திய வனத்துறை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், லஞ்ச ஒழிப்பு துறை என அனைவருக்கும் புகார் அனுப்பியிருக்கிறோம்.
ஆனால், ஐந்து நாள் கடந்துவிட்டதின்போதிலும் இதுவரை எந்தப் பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு, கட்டுமான அனுமதியையும் சுற்றுச்சூழல் அனுமதியையும் ரத்து செய்து, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் அந்த ராம்சார் நிலத்தை சட்ட விதிகளின்படி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் பேசி முடித்தார்.
சிக்கல் என்ன?
சதுப்பு நிலக் காடுகள் குறித்து பூவுலகின் நண்பர் அமைப்பின் வெற்றிச் செல்வனிடம் பேசினோம். “ஐ.நா. சபையின் ‘யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்’ என உலகின் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பது போல, மனிதர்களின் வளமான வாழ்விற்கான நிலங்கள் என்ற பட்டியலில் ஈரநிலங்கள், சதுப்பு நிலங்களை ராம்சார் ஒப்பந்தம் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
ராம்சார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதன் எல்லா வரையறைகளும் பொருந்தும் இடங்களில் ஒன்றுதான் பள்ளிக்கரணை.
2007ல் பள்ளிக்கரணை உட்பட 1242 ஹெக்டேர் நிலம் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இதில் 642 ஹெக்டேர் மட்டும்தான் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லாமல் சதுப்பு நிலமாகவே இருந்தது.
அதை பாதுகாக்கப்பட்ட நிலங்களாக வனத்துறையின் பொறுப்பில் கொடுத்துவிட்டார்கள். மீதமிருக்கும் நிலங்கள், சர்வே எண் குழப்பப்பட்டு பல்வேறு காலக்கட்டங்களில் கல்லூரிகள், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) போன்ற தனியார் அமைப்புகளிடம் விற்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில்தான் ‘ராம்சார் நிலங்கள்’ என்ற அறிவிப்பு வந்தது. அப்போதுதான் ‘சதுப்பு நிலங்கள்’ என்ற கணக்கெடுப்பில் தற்போது பிரச்னைக்குள்ளான பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் நிலம் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிலங்களும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
சதுப்பு நிலம் பாதுகாக்க வேண்டும்
அப்படியான நிலத்தில்தான் பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் நிறுவனம் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதிகளை பெற்றிருக்கிறது. எனவே, சர்வே எண்ணில் எப்போதோ நடந்த குழப்பத்தால் இந்த தவறு நடந்திருக்கிறது.
அதே நேரம் எப்போதோ நடந்த தவறுதானே என இந்த விவகாரத்தைத் தட்டிக்கழிக்க முடியாது. மாஞ்சோலை எஸ்டேட்டின் ஒப்பந்தம் முடிந்தவுடன் அங்கிருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்தினார்களே. அது சரி என்றால், சதுப்பு நிலத்தையும் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி மீட்கப்பட வேண்டும்.

புவியியலின்படியே இந்த சதுப்பு நிலங்கள், நதிகளின் அமைப்பு, பல்வேறு நீர் நிலைகள் எல்லாமே சேர்ந்துதான் சென்னையை செயல்படுத்துகின்றன. ஒரு நகரத்துக்கான வெள்ள வடிகாலாகவும், நீரை சேமிக்கும் மேலாண்மையையும் இந்த நிலங்கள் செய்கின்றன.
எனவே, சதுப்பு நிலங்கள் அழிந்தால் வெள்ளப் பாதிப்பு அதிகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் குறையவும் கூடுதல் வாய்ப்பு உள்ளது. அரசு முழு கவனத்துடன் சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, அதை சதுப்பு நிலங்களாகவே பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை" என்றார் விவரமாக.



















