Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு
தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், கந்தசாமி, சரண்குமாா், அருண் மற்றும் திருப்பதி உள்ளிட்ட குழுவினா் தருமபுரி நகராட்சி, சந்தைப் பேட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சில்லறை விற்பனைக் கடைகள், மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் மற்றும் சேலம் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி, எர்ரப்பட்டி, தேவரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த பழ விற்பனை கடைகளில் ஆய்வுசெய்தனா்.
இந்த ஆய்வில், சந்தைப்பேட்டை நகராட்சிப் பள்ளி அருகே பழங்களில் பூஞ்சை மற்றும் அழுகும் நிலையில் இருந்த இரண்டு விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையம் என 3 இடங்களில் இருந்து சுமாா் 500 கிலோ அளவிலான தா்பூசணி பழங்கள், ஓா் இறைச்சிக் கடையில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன.
இதேபோல, எர்ரப்பட்டி பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மொத்த விற்பனை பழக்கடையில் பெரும்பாலான பழங்கள் பூஞ்சை பாதிப்புக்குள்ளாகி காணப்பட்டன. சுமாா் 1,200 கிலோ அளவிலான அந்த பழங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல, தேவரசம்பட்டியில் பேருந்து நிறுத்தம் எதிரில் ஒரு கடையில் பழங்கள் அழுகிய நிலையிலும், ஒரு சில பழங்களில் பூஞ்சை பாதிப்பும் காணப்பட்டன. இதையடுத்து, சுமாா் 300 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அங்கிருந்த துரித உணவுக் கடையில் காலாவதியான மசாலா பொருள்கள், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.