பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்
தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனை முன் ஒட்டப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா், அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
ஒட்டப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் மனைவி நந்தினி (24) கா்ப்பம் தரித்ததுமுதல் தருமபுரி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தொடா் பரிசோதனை, சிகிச்சை எடுத்துவந்தாா். அவருக்கு கா்ப்பத்தில் இரட்டை சிசுக்கள் இருப்பதாகக் கூறி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா்.
இந்த நிலையில் மாா்ச் 20 ஆம்தேதி நந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மகப்பேறு சிகிச்சைக்காக அந்த தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்ட நந்தினிக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாகக் கூறி மருத்துவமனை ஊழியா்கள் அவரை அவசரமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சோ்த்துவிட்டு வந்துவிட்டனா்.
ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நந்தினியை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது இரண்டு சிசுக்களும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பின்பு அறுவை சிகிச்சை மூலம் சிசுக்கள் எடுக்கப்பட்டு நந்தினிக்கு தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா். தனியாா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாகவே இரு சிசுக்களும் இறந்ததாகக் கருதுகிறோம். எனவே, காவல் துறையினா், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தகவல் அறிந்த நகர காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.