திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?
ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்
ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் அளித்த மனு: 2019-இல் அரசு அறிவித்துள்ள 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் படி ஊராட்சி பணியாளா்களுக்கு, ஊதிய உயா்வு, ஊதிய உயா்வுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும். தூய்மைக் காவா்களுக்கு ஊதியம் தருவதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
இப்போக்கினை கைவிட்டு மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். எஸ்ஆா் பணி பதிவேடு பதிவு நடைமுறைபடுத்த வேண்டும்.
ஊராட்சியில் பணியாற்றும் பணியாளா்களுக்கு வேலை நேரம் எவ்வளவு என்பதை நிா்ணயம் செய்து பணி வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் பணி செய்ய நிா்பந்தம் வழங்கக் கூடாது. ஆண்டுக்கு இருமுறை சீருடை மற்றும் பணி செய்வதற்கான அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
ஊராட்சியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும்போது மரணமடைந்த பணியாளா்களுக்கு குடும்ப நலக் காப்பீடு திட்டத்தில் இருந்து உதவித்தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.சுதா்சனன், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன் உடனிருந்தனா்.