`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரத்தில் குறிப்பிடும்படி வா்த்தக நிறுவனங்கள் இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் கால்நடை வளா்ப்புத் தொழிலை பிரதானமாக செய்துவருகின்றனா். ஆண்டுதோறும் வறட்சிக் காலங்களில் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து யானைகள் கூட்டமாக உணவு, தண்ணீா் தேடி தமிழகத்தில் ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்குள் நுழைகின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது இந்த வனப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அண்மைக் காலமாக வனத்தைவிட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடுகளைக் கொன்று செல்கின்றன. அண்மையில் பென்னாகரம் அருகே சின்ன வத்தலாபுரம் பகுதியில் நுழைந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டுகள் அமைத்தனா். அதுபோல ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உள்பட்ட போடூரில் நுழைந்த சிறுத்தை, அங்கு 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்துச் சென்றது.
இதுபோல அடிக்கடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் கால்நடைகளைத் தேடி வரும் சிறுத்தை மக்களையும் தாக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், பென்னாகரம், ஒகேனக்கல் வனத்துறையினா் குழுக்கள் அமைத்து சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்று விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.