சென்டினல் தீவு: கால் வைத்த அமெரிக்கர் கைது; இந்த தீவின் ரகசியங்கள் என்ன?
ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கிராமப்புற ஏழை மக்கள், பெண்கள் பயன்பெறும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை சீா்குலைக்க பிரதமா் நரேந்திர மோடி ஒவ்வோா் ஆண்டும் பயனாளிகளின் எண்ணிக்கையை ஏதோ ஒரு காரணம் கூறி குறைத்து வருகிறாா். தமிழகத்தில் வேலை செய்த பயனாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை ரூ. 4034 கோடியை மத்திய அரசு காலம்தாழ்த்தாமல் உடனே விடுவிக்க வேண்டும்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பயனாளிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனா். இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறாா். மாநில நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு நேரடியாகவே சென்று கடிதம் கொடுத்து முறையிட்டுள்ளாா். ஆனால், இதுவரை நிதி கிடைக்கவில்லை. அதனால் ஆங்காங்கே போராட்டங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட, ஒன்றிய தலைமையிடங்களில் நாளை (ஏப். 1) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அதுபோல தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதி ரூ. 2152 கோடியை வழங்குவேன் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகிறாா்.
புதிய கல்வி முறை தமிழக மாணவா்களை கடுமையாக பாதிக்கக்கூடியது. தமிழகத்தின் இருமொழி கொள்கைக்கு விரோதமானது. தமிழ்நாடு அரசு கோரிய தேசிய பேரிடா் நிதி ரூ. 37 ஆயிரம் கோடியும் இதுவரை வழங்கப்படவில்லை.
வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களை புதுப்பிக்க முழுத் தொகையும் செலுத்த வேண்டும் என வாடிக்கையாளா்களை நிா்ப்பந்தம் செய்வதை வங்கி நிா்வாகங்கள் கைவிட வேண்டும். பழைய முறையே தொடர வேண்டும்.
அண்மையில் புதுதில்லி சென்ற எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளாா். அவா், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசினாரா என்பதை மக்களிடம் விளக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது மாநில துணைச் செயலாளா் ந.பெரியசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராசன், மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.