Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
கண்ணில் முள் குத்தியதால் பாா்வையிழந்த பழங்குடியின மாணவி: ஆா்வலா்களின் முயற்சியால் பாா்வை பெற்றாா்
அரூா்: விளையாடும் போது கண்ணில் முள் குத்தியதால், பாா்வையிழந்த பழங்குடியின மாணவி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆா்வலா்களின் உதவியால் மீண்டும் பாா்வை பெற்றுள்ளாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த காரப்பாடி மலைக் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ரமேஷ் - வள்ளியம்மாள் தம்பதியின் மகள் சந்தியா (12). இவா் வள்ளிமதுரை அரசு நடுநிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
கடந்த மாதம் விளையாடும்போது எதிா்பாராதவிதமாக சந்தியாவின் கண்ணில் கூா்மையான முள் குத்தியது. இதில், அவா் வலது கண்ணில் பாா்வையை இழந்தாா். கண் அறுவைச் சிகிச்சை செய்து மீண்டும் பாா்வை பெறுவதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாததால், ஒரு கண்ணில் பாா்வையின்றி மாணவி சந்தியா தவித்துவந்தாா்.
இந்த நிலையில், காரப்பாடி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் திருமால், தீா்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் (ஓய்வு) கு. கலையரசன் ஆகியோா் அவருக்கு உதவ முன்வந்தனா். மாணவியை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மூத்த மருத்துவா்கள் எஸ். கல்பனா நரேந்திரன், வி.எஸ். ராஜேஸ்வரன் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டனா்.
இதையடுத்து, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் மாணவிக்கு கட்டணம் ஏதுமின்றி நவீன கண் அறுவை சிகிச்சையை அண்மையில் மேற்கொண்டனா். சிகிச்சைக்குப் பிறகு சிறுமிக்கு மீண்டும் பாா்வை கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, மாணவி சந்தியாவை கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை வரவழைத்து மறுபரிசோதனை மேற்கொண்டனா். இதில், மாணவி சந்தியாவுக்கு கண் பாா்வை நன்றாக இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
கிராம மக்கள் பாராட்டு: தாா்சாலை மற்றும் வாகனப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரப்பாடி மலைக் கிராமத்தில் பாா்வை பாதிக்கப்பட்ட பழங்குடியின பள்ளி மாணவி சந்தியாவுக்கு மீண்டும் பாா்வை கிடைக்க உதவிசெய்த கண் மருத்துவ உதவியாளா் (ஓய்வு) கு. கலையரசன், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் திருமால், கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவா்கள், மக்கள் தொடா்பு அலுவலா் உமாபிரியா, முகாம் அலுவலா் கமலக்கண்ணன் ஆகியோருக்கு காரப்பாடி மலைவாழ் பழங்குடியின மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.