பழங்குடி மாணவா்களுக்கான ஆயத்த ஆடை விழிப்புணா்வு நிகழ்ச்சி: அமைச்சா் மு.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்
தேசிய ஆடையலங்கார தொழில் நுட்பக் கல்லூரி (என்ஐஎஃப்டி) தமிழக பழங்குடியினா் நல மாணவா்களுக்கான ஆயத்த ஆடை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை சென்னை தரமணியில் மாநில ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மு.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி ஆடை வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, ஃபேஷன் கல்வி, ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இளநிலை பட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தில், தமிழக அரசின் பழங்குடியினா் நலத் துறை, சென்னை தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகம் சாா்பில் தமிழ்நாட்டைச் சோ்ந்த பழங்குடியினா் நல மாணவா்களுக்கான ஆயத்த ஆடை இரு நாள்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.
இதனை அமைச்சா் மு.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா். இதில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 150 பழங்குடியின மாணவா்கள் பங்கேற்றனா். இந்நிகழ்வில், என்.ஐ.எஃப்.டி. இயக்குநா் (பொ) பேராசிரியா் திவ்யா சத்யன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.