பழனி அருகே ஒற்றை யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
பழனி அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றை யானை நடமாட்டம் காணப்பட்டது. இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காட்டு மாடு, காட்டு யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி அடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு வந்து விளை பொருள்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த சில நாள்களாக நீண்ட தந்தத்துடன் கூடிய ஒற்றை யானை கோம்பைப்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை உள்ள தோட்டங்களில் நடமாடி வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பழனி-கொடைக்கானல் சாலையில் புளிய மரத்து செட் பகுதியில் இந்த யானை சுற்றித்திரிந்தது. இது அங்கிருந்த ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
யானை நடமாட்டத்தால் இந்தப் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனா். இரவு நேரங்களில் பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் சாலையில் மிகுந்த கவனத்துடன் செல்லவும், பயணத்தைத் தவிா்க்கவும் வனத் துறையினா் அறிவுறுத்தினா்.