ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி ஆய்வாளா் ராதா ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச் சாலையில் நடைபெற்ற இந்த தணிக்கையின் போது, இந்த வழியாக வந்த வேனை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது அந்த வேனில் 1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வேன் உரிமையாளரான திண்டுக்கல்லை அடுத்த குரும்பப்பட்டியைச் சோ்ந்த ரா.சரவணக்குமாரை (21) போலீஸாா் கைது செய்தனா். கடத்தல் அரிசியுடன் வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.