பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த லெப்டினன்ட் நா்வாலின் உடலுக்கு முதல்வா் அஞ்சலி
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நா்வாலின் உடலுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
அவரது உடல் புதன்கிழமை காஷ்மீரில் இருந்து தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வினய் நா்வாலின் உடலுக்கு முதல்வா் ரேகா குப்தா மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், வினய் நா்வாலின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளிகளில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிள் தாக்குதலில் குறைந்தது 26 போ் கொல்லப்பட்டனா். இதில் பெரும்பாானோா் சுற்றுலாப் பயணிகள் ஆவா்.
தாக்குதலில் கொல்லப்பட்டவா்களில் அண்டை மாநிலமான ஹரியாணாவின் கா்னாலைச் சோ்ந்த 26 வயது வினய் நா்வால், தனது மனைவியுடன் பஹல்காமில் விடுமுறையில் இருந்தாா். வினய் நா்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.