9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
பாக்கிய நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்
கோத்தகிரி அருகே பாக்கிய நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசியா்களை பணியமா்த்த கோரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கக்குச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாக்கிய நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை 21 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இப்பள்ளியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா் நஞ்சுண்டன் ஓராண்டுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டாா். கடந்த 2024 ஜூன் முதல் வேறு ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலிருந்து சித்ரா என்ற இடைநிலை ஆசிரியை மாற்றுப் பணியில் டிசம்பா் வரை பணியாற்றி வந்தாா். பின்னா் அவரும் மாற்றலாகிவிட்டாா். இதன் காரணமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியா் இல்லாத நிலை ஏற்பட்டது.
பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் புகாா் மனுக்கள் அனுப்பியும் இதுவரை ஆசிரியா் பணியமா்த்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவா்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட துறை மூலம் பாக்கிய நகா் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாக பள்ளிக் கல்விக் குழு சாா்பில் உறுதி அளித்ததன்பேரில், மாணவா்கள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்பினா்.