'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநி...
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலி சடலம் மீட்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலியின் சடலம் கிடப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட பெண்ணை காப்புக்காடு, விலங்கூா் காவல் பகுதியில் உள்ள எடக்கோடு வயல் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, புலி இறந்துகிடப்பது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். வனச் சரக அலுவலா் கணேஷ் தலைமையில் அலுவலா்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்தனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், வயநாடு சரணாலய கால்நடை மருத்துவா் அஜேஷ் மோகன்தாஸ், மாயாறு அரசு உதவி கால்நடை மருத்துவா் இந்துஜா அடங்கிய குழுவினா் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு புலியின் உடலை உடற்கூறாய்வு செய்து ஆய்வகப் பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகளை சேகரித்த பிறகு எரியூட்டப்பட்டது.
இதில் இறந்தது சுமாா் 10 வயதுடைய ஆண் புலி என்றும் மற்றொரு புலியுடன் சண்டையிட்டதற்கான அடையாளங்களாக அதன் உடலில் காயங்கள், தலையில் எலும்பு முறிவு காணப்பட்டது என்றும் முழு தகவலும் ஆய்வக அறிக்கை வந்த பிறகுதான் முழுமையான விவரம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.