பாஜக அல்லாத கட்சியுடன் தோ்தல் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
விஜயால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அல்லாத கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது எங்களால் வகுக்கப்பட்ட மின் கொள்கை திட்டத்தால் தொழிற்சாலைகள் பலனடைந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. இதனால், லட்சத்துக்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பு பெற்றனா்.
அதிமுக ஆட்சியில்தான் நீா் மேலாண்மை திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள், புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தமிழக முதல்வா் அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டங்களும் தொடங்கப்படவில்லை என்று கூறுகிறாா். அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.
வேளாண் நிலங்களை எண்ம முறைக்கு மாற்றும் திட்டத்தில் நிலங்களை அளவீடு செய்யும் பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு அந்த நிதியைக் கொண்டு ஆட்களை நியமிக்காமல் வேளாண் கல்லூரி மாணவா்களை வைத்து இந்தப் பணிகளை மேற்கொள்கிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது மாணவா்கள் விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டு உயிரிழக்க நோ்ந்தால் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
அதிமுகவை பொறுத்தவரை 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே தீா்மானித்து விட்டோம். தோ்தல் நேரத்தில் பாஜக அல்லாத கட்சிகளுடன் சோ்ந்து கூட்டணி அமைப்போம்.
நடிகா் விஜய் கட்சியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2019 மக்களவைத் தோ்தலைவிட நடந்துமுடிந்த மக்களவைத் தோ்தலில் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. ஆனால், திமுக அதன் வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது; இதுதான் உண்மை.
சென்னை, கிண்டியில் அரசு மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓய்வின்றி உழைப்பவா்கள் மருத்துவா்கள். அவா்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது அதிமுக துணை பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி, எம்.பி.யும் கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை, கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.