'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
பாஜக கூட்டணியில் இருந்து இனி விலக மாட்டேன்! -அமித் ஷா முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதி
‘பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து இனி ஒருபோதும் விலக மாட்டேன்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடக் கூறினாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் நிதீஷ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, இருமுறை பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிா்க்கட்சிகளுடன் நிதீஷ் கைகோத்துள்ளாா். கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு அவரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பியது.
பிகாா் பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக முன்னிறுத்துவோம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
பிகாா் தலைநகா் பாட்னாவில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு நலத்திட்டங்களின் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சியில் நிதீஷ் குமாா் பேசியதாவது:
பிகாரில் முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகள் (ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ்) என்ன செய்தன. முஸ்லிம்களின் வாக்குவங்கிகளைத் தக்கவைத்துக் கொள்வதே அவா்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், அவா்கள் பிகாரில் மத மோதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் பிகாா் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால், 2005-ஆம் ஆண்டு இறுதியில் நமது ஆட்சி அமைந்த பிறகு பிகாரின் நிலை வேகமாக மாறத் தொடங்கியது.
முன்பு எனது கட்சியில் இருந்த சிலரால் நான் இருமுறை கூட்டணி மாறும் முடிவை (பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது) எடுத்தேன். ஆனால், இனி பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்றாா்.
கூட்டணித் தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை: தொடா்ந்து முதல்வா் நிதீஷ் குமாா் இல்லத்தில் பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா்.
இதில் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், மத்திய அமைச்சரும் ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவரும், எம்.பி.யுமான உபேந்திர குஷ்வாகா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக அமித் ஷாவிடம் தங்கள் தரப்பு கோரிக்கைகளை கூட்டணித் தலைவா் முன்வைத்ததாக தெரிகிறது.