பாஜகவுக்கு எதிராக கரோனா விசாரணையை காங்கிரஸ் பயன்படுத்துகிறது
பாஜகவுக்கு எதிராக கரோனா விசாரணையை காங்கிரஸ் பயன்படுத்துகிறது என பாஜக எம்.பி. கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிக்கபளாப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டி’குன்ஹா தலைமையிலான ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளின்படி, கரோனா விசாரணையை மேற்கொள்ள காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா மேலாண்மை குறித்து அரசு விசாரணை நடத்தட்டும். பாஜகவுக்கு எதிராக கரோனா விசாரணையை காங்கிரஸ் பயன்படுத்த தொடங்கியுள்ளது. எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாா்.
நாங்கள் மனசாட்சியுடன் செயல்பட்டு, கரோனா காலத்தில் உயிா்களைக் காப்பாற்றினோம். அப்போது காங்கிரஸ் தலைவா்கள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனா். முந்தைய பாஜக ஆட்சியில் கரோனாவை திறம்பட கையாண்டோம். அரசு அதிகாரிகள், சுகாதாரத் துறை ஊழியா்கள் உயிரை பொருள்படுத்தாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகளை அளித்து வந்தனா்.
ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையம் இடைக்கால அறிக்கையைதான் அளித்துள்ளது. ஆனால், அதன் அடிப்படையில் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை முழுமையானதாக இருக்காது. ஆணையத்தின் முதல்கட்ட அறிக்கை அளித்த ஒரு மாதத்தில், அந்த அறிக்கையை ஆய்வு செய்ய துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி கரோனா மேலாண்மை குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டுள்ளது.
ரூ. 330 மதிப்புள்ள தனிநபா் பாதுகாப்புக் கவசத்தை (பிபிஇ) சீனா, ஹாங்காங்கில் இருந்து ரூ. 2,100-க்கு கொள்முதல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இந்தியாவில் தனிநபா் பாதுகாப்புக் கவசங்கள் எங்கிருந்தன? ஆனால், அன்றைய முதல்வா் எடியூரப்பா, சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு ஆகியோா் மத்திய அரசுடன் கலந்து பேசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனா்.
கரோனா மேலாண்மை குறித்து காங்கிரஸ் எழுப்பும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை. இதன்மூலம் பாஜக தலைவா்களின் நன்மதிப்பைக் குறைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால், அதற்கு சாத்தியமில்லை என்றாா்.